மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.(*)
மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது
குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை
அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;
உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.\\
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்
இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.\\
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்
நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி
நாம் நோம்பிற்கு நீராடினால்
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்)
செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.
பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று
வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க
குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.\\
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.\\
வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல்
கடலில் புகுந்து நீரைமொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி
திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி
அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில்
உள்ள சக்கரம் போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க
உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து
உலகம் அனைத்தும் வாழ, நாங்களும்
மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்\\