Thursday, 30 July 2009




மச்ச அவதாரம்

மச்ச அவதாரம் வைணவ சமயக் கடவுள் திருமாலின் முதல் அவதாரம். மச்சம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

இதில் மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப்பிரளயத்திலிருந்து உலகைக் காத்தமை, பிரம சிருட்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை உணர்த்துகிறது. (அபிதான சிந்தாமணி - பக் 1236)



கூர்ம அவதாரம்

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
திருப்பாற்கடலை அசுரரும் தேவரும் மந்திரமேருவை மத்தாக வைத்துக் கடைகையில் அடியில் பிடிமானத்திற்காகத் திருமால் ஆமை உரு எடுத்து மத்திற்குப் பிடிமானமாக இருந்தார். (பாகவதம்- கூர்ம புராணம்)




வராக அவதாரம்

விஷ்ணுவின் வராக அவதாரம் - உதையகிரி குகையில் புடைப்புச் சிற்பம்
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.



நரசிம்மர்

நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.

தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம்.



வாமனர்

வாமன அவதாரம் என்பது மாலியத்தார் (வைணவர்கள்) முழுமுதற் கடவுளாகக் கருதும் திருமால் (விஷ்ணு) நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.




பரசுராமர்
பரசுராமர் அல்லது பரசுராம பார்கவர் என்பவர் இந்து புராணங்களில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவரின் மகன் ஆவார். பரசு என்றால் கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது இவர் அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார் என்பது தொன்நம்பிக்கை.




இராமர்
இராமர் இந்துக் கடவுள்களுள் ஒருவராவார். விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். உண்மையிலேயே ராமன் என்ற பெயரில் மன்னன் ஒருவன் இந்திய வராற்றில் இருந்தானா என்பது பற்றி பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் இவரது வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளது. இராமாயணத்தில் சீதை இவரது மனைவி. இவர் இலட்சுமியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
இந்து புராணங்களிலும் தென்னாசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் உள்ள நாட்டுப்புறக்கதைகளில் மிகவும் புகழ்பெற்ற தலைவன் இராமன் ஆவார். இவர் கோசல மன்னன் தசரதனுக்கும் கௌசல்யாவுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார்.



கிருஷ்ணர்

கிருஷ்ணர் இந்து சமய கடவுளாவார். இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நந்நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப் படுகிறது.


கிருஷ்ணரின் கதை

இளமை
வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்கு அப்பால் இருந்த பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர், யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.

வாலிபம்
இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் தெய்வீகக் காதல் புரிந்தார்.
வாலிப வயதை அடைந்தவுடன் மதுரா சென்று கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராஜ்யத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜூனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் ஊருக்கு மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.

கீதை
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம் கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.

முடிவு
பின்னர் துவாரகையில் தன் மனைவியான ருக்மணியுடன் வாழ்ந்து யாதவர்களின் அரசராக விளங்கினார். ஒரு நாள் காட்டில் ஒரு வேடனின் அம்பு தாக்கி காலமானார். யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் மூழ்கியது.



பலராமர்

இந்து மதத்தில் பலராமர் கிருஷ்ணரின் அண்ணன் ஆவார். இவர் பலதேவர், பலபத்ரர், ஹலாயுதர் என்றும் அழைக்கப்படுகிறார். வைணவத்திலும் தென்னிந்திய இந்து புராணங்களிலும் பலராமர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவே கருதப்படுகிறார். எனினும் இவர் விஷ்ணு படுத்திருக்கும் ஆதி சேஷனின் வடிவம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவர் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறந்ததாகக் கூறப்படுகிறது.



கல்கி (அவதாரம்)

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

Mantra

Mantra